ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மீன் பிடிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது

கோலாலம்பூர், அக் 28- தன் தந்தை மற்றும் வளர்ப்பு சகோதரருடன் கடந்த செவ்வாய்க்கிழமை ரவாங், சுங்கை கோங்கில் மீன் பிடித்து விட்டு ஆற்றைக் கடக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட பதின்ம வயது இளைஞரின் சடலம் நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.

முகமது அலிப் ஃபாமி அப்துல்லா (வயது 16) என்ற அந்த இளைஞரின் சடலம் சம்பவ இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பெஸ்தாரி ஜெயா, ஃப்ரூட் வேலி குப்பைத் தடுப்பு வலையில் சிக்கியிருந்தது நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

அம்மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.07 மணியளவில் மீன் பிடித்து விட்டு ஆற்றைக் கடக்க முயன்ற போது வேகமான நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

முகமது அலிப் நீரில் அடித்துச் செல்லப்பட்ட  வேளையில் அவரின் தந்தையும் வளர்ப்பு சகோதரரும் அப்பகுதியில் மீன் பிடித்துக்  கொண்டிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து தேடி மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதோடு காவல் துறையின் டிரோன் பிரிவும் இந்நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ஃப்ரூட் வேலி குப்பை தடுப்பு வலையமைப்பு பகுதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் அவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :