ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு செப்டம்பர் வரை வெ.12.6 கோடி போதைப் பொருள் பறிமுதல்- பேராக் போலீஸ் தகவல்

ஈப்போ, அக் 28 - இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 12.6 கோடி ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பேராக் போலீஸார் கைப்பற்றியதாக பேராக் மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முழுவதும் பதிவான 4 கோடி வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும் என்று அவர் கூறினார்.

5,204 விசாரணை ஆவணங்களில் 5,040 ஆவணங்கள் முடிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விநியோகத்தை ஒழிப்பது தொடர்பில் 1,868 பேருக்கு எதிராகவும், போதைப்பொருள் வைத்திருந்த 4,884 பேருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீர் சோதனையில் போதைப் பொருளை பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடந்து ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழ்  3,200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது  என்று அவர் குறிப்பிட்டார்.

பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற  போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் வழக்குப் பொருட்களை அழிக்கும் நிகழ்வைப் பார்வையிட்டப் பின்னர் முகமது யுஸ்ரி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

பேராக் காவல்துறை 47 லட்சம் வெள்ளி மதிப்பிலான ஹெராயின், கஞ்சா, ஷாபு உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களை அழித்தது.

ஈப்போ, தைப்பிங், மஞ்சோங், ஹிலிர் பேராக், தாப்பா, கோல கங்சார், பத்து காஜா, சுங்கை சிப்புட், முவாலிம், கம்பார், கிரிக், கிரியான், பெங்கலான் உலு, செலாமா மற்றும்  பேராக் தெங்கா ஆகிய 15 மாவட்டங்கள் இந்த ஆண்டு போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டன என்று அவர் மேலும் கூறினார்.

Pengarang :