ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

கிள்ளானில் வடிகால் மற்றும் வெள்ளப் பிரச்னைக்கு முன்னுரிமை- தொகுதி வேட்பாளர் கணபதிராவ் கூறுகிறார்

ஷா ஆலம், நவ 2- வரும் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் கிள்ளான் தொகுதியில் நிலவும் வடிகால் மற்றும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தனது தலையாயப் பணியாக  இருக்கும் என்று அத்தொகுதி வேட்பாளரான வீ.கணபதிராவ் கூறினார்.

இத்தொகுதி மக்கள் வெள்ளம், சாலை மற்றும் வடிகால் பிரச்னைகளை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருவதாக நடப்பு கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார்.

நேற்று நான் பூலாவ் இண்டா சென்றேன். அங்குள்ள மக்கள் வெள்ளப் பிரச்னையை எதிர்நோக்கி வருவதை கண்டேன். இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை மற்றும்,  கோலக்கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளேன் என ஜசெக வேட்பாளரான அவர் குறிப்பிட்டார்.

இப்பிரச்னைக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காணும் பொருட்டு அடிப்படை வசதிகள்  துறைக்கான  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிமை தொடர்பு  கொண்டேன். அவரும் இப்பகுதியில் நிலவும் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வாக்குறுதியளித்துள்ளார் என்றார் அவர்.

வரும் பொதுத் தேர்தலில் கிள்ளான் தொகுதியை பக்கத்தான் ஹராப்பான் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான கணபதிராவ் சொன்னார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பான சேவை மற்றும் சிலாங்கூரில் பக்கத்தான் கூட்டணியின் வலுவான கோட்டை என்ற அடிப்படையில் கிள்ளான் தொகுதியை வரும் தேர்தலில் தக்க வைத்துக் கொள்ள இயலும் என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் கிள்ளான் தொகுதியில் சார்ல்ஸ் சந்தியாகோ 78,773 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.


Pengarang :