ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGORSUKANKINIYB ACTIVITIES

15வது பொதுத் தேர்தல்- அஸ்மின் அலி உள்பட எட்டு அமைச்சர்கள்  தோல்வி

ஷா ஆலம், நவ 21- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உள்பட எட்டு அமைச்சர்கள் தோல்வி கண்டனர்.

கடந்த மூன்று தவணைகளாக கோம்பாக் தொகுதியை தன் வசம் வைத்திருந்த அஸ்மின் அலி இம்முறை ஹராப்பான் வேட்பாளரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் 12,729 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

Zuraida Kamaruddin

அஸ்மின் தவிர்த்து, நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருள் தெங்கு அஜிஸ் கோல சிலாங்கூர் தொகுதியிலும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மெக்சிமஸ் ஓங்கிலி கோத்தா மெர்டு தொகுதியிலும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் சுங்கை பூலோ தொகுதியிலும் தோல்வி கண்டனர்.

மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரீனா ஹருண், தோட்டத் துறை மற்றும் மூலத் தொழில் அமைச்சர் டத்தோ ஜூரைடா கமாருடின், புறநகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட், ஊராட்சித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசால் நைனா மரைக்கான் ஆகியோர் தோல்வி கண்ட இதர அமைச்சர்களாவர்.

Dato’ Seri Mohamed Azmin Ali 

அஸ்மின் மற்றும் ரீனா ஹருண் பெரிக்கத்தான் கட்சி சார்பிலும் தெங்கு ஸப்ருள் கைரி, மாட்ஸிர் ஆகியோர் தேசிய முன்னணி சார்பிலும் மெக்சிமஸ் சபா கூட்டணி கட்சி சார்பிலும் ஜூரைடா பார்ட்டி ராக்யாட் மலேசியா சார்பிலும் போட்டியிட்டனர்.

இது தவிர ஏழு துணையமைச்சர்களும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினர்.


Pengarang :