ECONOMYMEDIA STATEMENTPBT

மருத்துவர், உதவியாளரிடம் கொள்ளையிட்ட நபருக்கு 5 ஆண்டுச் சிறை, பிரம்படி

பாங்கி, நவ 23-  கிளினிக் ஒன்றில் மருத்துவர் மற்றும் உதவியாளரை கத்தியைக் காட்டி கொள்ளையடித்த வழக்கில் வேலையில்லாத நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதித்து பண்டார் பாரு பாங்கி செஷன்ஸ் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை முகமது ஹபீஸ் கசாலி (வயது 32) என்ற அந்நபர்  ஒப்புக் கொண்டதையடுத்து நீதிபதி  எஃபாண்டி நஜிலா அப்துல்லா அவருக்கு இத்தண்டனையை விதித்தார்.

அந்நபருக்கு எதிரான முதல் குற்றச்சாட்டிற்கு  நான்காண்டுச் சிறையும் ஒரு பிரம்படியும் இரண்டாவது குற்றச்சாட்டிற்கு ஐந்தாண்டு சிறையும் ஒரு பிரம்படியும்  விதிக்கப்பட்டன.  இவ்விரு தண்டனைகளும் அவர் கைது செய்யப்பட்ட தினமான நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து  ஏககாலத்தில் அமலுக்கு வருவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

கடந்த 9ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு பண்டார் ஸ்ரீ புத்ரியிலுள்ள கிளினிக் ஒன்றில் டாக்டர் ஐனுன் நஜா முகமது பனுரி (வயது 26), மற்றும் கிளினிக் உதவியாளர் நூர் சியாஸ்வானி நூர் ஹிசாம்( வயது 24), ஆகியோரை மீது கத்தியைக் காட்டி மிரட்டி  ஒரு மடிக்கணினி மற்றும் கைப்பேசியை கொள்ளையிட்டதாக அவர் மீது இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மற்றும் பிரம்படி வழங்க வழிவகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397 இன் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்தார் .

குற்றவாளிகள் குற்றத்தைச் செய்யும்போது ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தியதையும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதம் ஏந்திய கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதையும்  கருத்தில் கொண்டு அவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் எஸ். சங்கீதா நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

எனினும்  வழக்கறிஞர் நியமிக்கப்படாத  முகமது ஹபீஸ், தாம் இரண்டு குழந்தைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதால்  இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Pengarang :