ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

லைசென்ஸ் இன்றி செயல்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மீது நீதிமன்ற நடவடிக்கை

ஷா ஆலம், ஏப் 14- கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் வர்த்தக லைசென்ஸ் பெறாமல் செயல்பட்டதற்காக செம்பனை எண்ணெய் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் மீது இங்குள்ள தெலுக் டத்தோ நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த தொழிற்சாலைக்கு எதிராக 2005ஆம் ஆண்டு கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் துணைச் சட்டம் 3 மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை துணைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகம் கூறியது.

நீதிபதியின் துணையின்றி இந்த வழக்கில் ஆஜரான சம்பந்தப்பட்டத் தொழிற்சாலை உரிமையாளர், இந்த குற்றத்திற்கு விதிக்கப்பட்ட அதிகப்பட்ச அபராதத் தொகையை எந்தவொரு கழிவும் இன்றி தாம் முழுமையாகச் செலுத்தி விட்டதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அவரை வழக்கிலிருந்தும் குற்றச்சாட்டிலிருந்தும் விடுவிப்பதாக மாஜிஸ்திரேட் கைருள் ஃபாரி யூசுப் தீர்ப்பளித்தார்.

இதனிடையே, முறையான லைசென்ஸ் இன்றி வர்த்தகத்தை நடத்தும் தனி நபர்கள் அல்லது வர்த்தக ஸ்தாபானங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

இத்தகைய கட்டுப்படுத்தப்படாத வர்த்தக நடவடிக்கைகள் மாநில அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும்  பொது அமைதிக்கு குந்தகத்தையும் விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :