ECONOMYSELANGOR

மான் என எண்ணி சுட்டதில் நண்பர் மரணம்- வேட்டையின் போது நிகழ்ந்த துயரம்

சிரம்பான், ஏப் 29- வேட்டையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மான் என எண்ணிச் சுட்டதில் அவரின் நண்பர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். இந்த துயரச் சம்பவம் ஜெலுபு, கோல கிளாவாங், மூக்கா சவுக் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இம்மாதம் 24ஆம் தேதி நிகழ்ந்தது.

நேற்றிரவு 8.30 மணியளவில் இங்குள்ள தித்தி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த அந்த 61 வயதான நபர், தன் நண்பரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டதாக ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. மஸ்லான் உடின் கூறினார்.

இந்த சம்பவம் கடந்த 24ஆம் தேதி விடியற்காலை நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது எனக் கூறிய அவர், வேட்டையாடுவதற்காக சொந்தமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகப் பேர்வழியும் அவரின் நண்பரும் காட்டிற்குச் சென்றதாகச் சொன்னார்.

வேட்டையின் போது மான் என எண்ணி தன் நண்பரையே அந்த சந்தேகப் பேர்வழி சுட்டுள்ளார். துப்பாக்கி குண்டு பாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அச்சந்தேகப் பேர்வழி தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் அவரிடமிருந்து சொந்தமாக தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கியும் சில தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு மற்றும் 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் விசாரணைக்காக அந்த சந்தேக நபர் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார்


Pengarang :