EKSKLUSIFMEDIA STATEMENT

“டத்தோஸ்ரீ“ விருதுக்கு ஆசைப்பட்டு வெ.571,000 வெள்ளியை பறிகொடுத்த குத்தகையாளர்

குவாந்தான், மே 26- “டத்தோஸ்ரீ“ விருதை வாங்கித் தருவதாக தொலைபேசி வழி கூறிய அனாமதேய நபரின் ஆசை வார்த்தையில் மயங்கி குத்தகையாளர் ஒருவர் 571,000 வெள்ளியை இழந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 63 வயதுடைய அந்த குத்தகையாளரை தொடர்பு கொண்ட ஒரு நபர், தன்னை பகாங் அரண்மனையின் உயரிய விருதுகள் வழங்கும் பணிக்கு பொறுப்பான அதிகாரி எனக் கூறிக் கொண்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

தம்மிடம் ஆறு உயரிய விருதுகளுக்கான கோட்டா உள்ளதாகவும் அந்த விருதைப் பெற வேண்டுமானால் அரண்மனை தரப்பினர் இலவசமாக நடத்தும் நிகழ்வுக்கு பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அந்த நபர் குத்தகையாளரிடம் கூறியதாக அவர் சொன்னார்.

இந்த வாய்ப்பினால் ஈர்க்கப்பட்ட குத்தகையாளர் அந்த விருதைப் பெறுவதற்கு தம்முடன் தன் சகாக்கள் நால்வரையும் பரிந்துரைத்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் குத்தகையாளரை பலமுறை தொடர்பு கொண்டு நன்கொடைகளை பெற்றுள்ளார்.

அந்த நபர் வழங்கிய  5 வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 571,000 வெள்ளியை 32 தடவை அந்த குத்தகையாளர் கட்டங்கட்டமாக மாற்றியுள்ளார் என டத்தோ யாஹ்யா கூறினார்.

தனது சேமிப்பில் இருந்து டத்தோஸ்ரீ விருதுக்கு ஆசைப்பட்ட இதர நண்பர்களிடமிருந்தும் பணத்தைப் பெற்று அந்த நபருக்கு  அக்குத்தகையாளர் அனுப்பியுள்ளார்.

மிகப்பெரிய தொகையை ஒப்படைத்த பின்னரே இந்த விருதின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் கொண்ட அந்த குத்தகையாளர் குவாந்தான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இது குறித்து நேற்று புகார் செய்தார் என அவர் தெரிவித்தார்.


Pengarang :