ECONOMYMEDIA STATEMENT

மக்களிடையே புரிந்துணர்வை வலுப்படுத்த 56 தொகுதிகளிலும் ஒற்றுமைத் தூதர்கள் நியமனம்

ஷா ஆலம், மே 27- அடிமட்ட நிலையில் ஒற்றுமை உணர்வையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கு ஏதுவாக மாநிலத்தின் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் சிலாங்கூர் ஒற்றுமைத் தூதர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அந்த ஒற்றுமைத் தூதர்களை நியமனம் செய்யும் பணியை அரசு சாரா அமைப்பு ஒன்று மேற்கொள்ளும் என்று ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சிலாங்கூரிலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒற்றுமைத் தூதர்களாகச் செயல்படுவதற்கு அனைத்து தரப்பினரை குறிப்பாக இளைஞர்களை நாங்கள் அழைக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை  மேற்கொள்வதில் துணை புரிவது மற்றும் ருக்குன் தெத்தாங்கா அமைப்பினருடன் ஒத்துழைப்பை நல்குவது போன்ற பணிகளை கொள்ளும் பொறுப்பு இந்த ஒற்றுமைத் தூதர்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள தாமான் தாசேக் ஷா ஆலமில் நடைபெற்ற மாநில நிலையிலான ஒற்றுமை வார கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் இவ்வாறு சொன்னார்.

மாநிலத்தின் அனைத்து தொகுதிகளில் ஒற்றுமைத் தூதர்களை நியமிக்கும் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு 400,000 வெள்ளி மானியத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் சித்தி மரியா குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தோடு வாழும் உணர்வை மக்கள் மத்தியில் விதைப்பதற்காக ஒற்றுமை தொடர்பான திட்டங்கள் தொடச்சியாகவும் சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :