ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூரில் தொகுதி பங்கீடு 80 விழுக்காட்டுக்கும் மேல் பூர்த்தி- அமிருடின் தகவல்

ஷா ஆலம், ஜூன் 5- சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 49 தொகுதிகளுக்கான ஒதுக்கீடு தொடர்பில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி ஆகிய கூட்டணி களுக்கிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள எழு தொகுதிகளுக்கான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக இந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முழுமை பெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தொகுதி ஒதுக்கீட்டைப் பொறுத்த வரை 83 விழுக்காடு பூர்த்தி அடைந்து விட்டது என்பதை இப்போதைக்கு நான் கூற முடியும். மாநில அளவில் நாங்கள் இரு முறை மட்டுமே சந்தித்துள்ள நிலையில் இந்த முன்னேற்றம் மிகப்பெரிய வெற்றியை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சி அடுத்த வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது. அப்பேச்சு வார்த்தையில் உறுதியான முடிவை எடுப்போம் என நம்புகிறேன் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில நிலையிலான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை விருதளிப்பு நிகழ்வுக்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 10 இல் இருந்து 17 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளதாக இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையின் முடிவுகளை ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் இறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :