ECONOMYMEDIA STATEMENTPBT

செராசில் ஏற்பட்ட தீவிபத்தில் கிடங்கு, ஏழு தொழிற்சாலைகள் முற்றாக அழிந்தன

கோலாலம்பூர், ஜூன் 30- செராஸ், புடிமான் தொழிற்பேட்டையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு தொழிற்சாலைகளும் ஒரு பொருள் சேமிப்பு கிடங்கும் முற்றாக அழிந்த வேளையில் மேலும் இரு தொழிற்சாலைகள் கடுமையாகச் சேதமுற்றன.

இன்று விடியற்காலை 2.00 மணியளவில் ஏற்பட்ட அந்த விபத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

இந்த தீ விபத்து தொடர்பில் விடியற்காலை 2.15 மணி அளவில் தனது தரப்புக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து 23 நிமிடங்களில் முதல் குழு சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து பண்டார் துன் ஹூசேன், காஜாங், பாங்கி, பாண்டான், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், சைபர் ஜெயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 48 பேரடங்கிய தீயணைப்புக் குழுவினர் 18 தீயணைப்பு வண்டிகள், நான்கு தண்ணீர் டாங்கி லோரிகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த தொழிற்பேட்டை பகுதியிலுள்ள நான்கு தொழிற்சாலைகளில் தீ முதலில் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அருகில் உள்ள இதரத் தொழிற்சாலைகளுக்கும் பரவியது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அந்த தொழிற்சாலைகள் மாற்றியமைக்கப்பட்டது. ஒன்றோடொன்று நெருக்கமாக இருந்தது  மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது ஆகிய காரணங்களால் தீ கட்டுக்கடங்காமல் பரவியது என அவர் கூறினார்.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட வேளையில் தீயை முழுமையாக அணைக்கும் பணி தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :