ECONOMYMEDIA STATEMENTPBT

50 தடங்களில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை- 6 கோடி பேர் பயனடைந்தனர்

ஷா ஆலம், ஜூன் 30- சிலாங்கூர் மாநில அரசின் ஸ்மார்ட் சிலாங்கூர்  இலவச பஸ் சேவை கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 6 கோடி பயணிகள் அச்சேவையைப் பயன்படுத்தி உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 50 தடங்களில் 166 பஸ்களுடன் இந்த சேவையை வழங்குவதற்கு மாநில அரசு ஆண்டுதோறும் 4 கோடியே 50 லட்சம்  வெள்ளியை செலவிட்டு வருவதாக போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  இங் ஸீ ஹான்  கூறினார்.

அரசாங்க அலுவலகங்கள், பள்ளிகள், அரசாங்க மருத்துவமனைகள், மற்றும் வர்த்தக மையங்களை  இந்த சேவை உள்ளடக்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மிக அதிகமாக அதாவது ஒரு கோடியே 56 லட்சம் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தினர் என அவர் சொன்னார்.

நீடித்த வளர்ச்சிக்கான உந்து சக்தியாக திறன்மிக்க போக்குவரத்து முறை விளங்குகிறது. இதன் மூலம் மக்கள் வைப்பதற்குரிய உகந்த சூழலை மாநகரில் உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். போக்குவரத்து துறைக்கான மாநில  ஆட்சி குழு உறுப்பினராக  கடந்த 2018 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றது முதல் ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்  கோவிட் 19 நோய் தொற்று பரவல் ஏற்படும் வரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன என அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஸ்மார்ட் சிலாங்கூர் ஒரு பஸ் சேவை, மொபிலிட்டி வாகனம், இ- ஸ்கூட்டர், சைக்கிள் தடம் பாதசாரிகளுக்கான தடம் மற்றும் டிரான்சிட் வேன் சேவை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டதை சித்தரிக்கும் விளக்கப்படத்தையும் அவர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார் .


Pengarang :