MEDIA STATEMENTSUKANKINI

சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் வெற்றிக்கு மாநில அரசின் பங்களிப்பு பேருதவி

ஷா ஆலம், ஆக 9- சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து குழுவின் மேம்பாட்டிற்கு மாநில அரசு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு அக்குழு பல வெற்றிகளை ஈட்டுவதற்கும் தலைசிறந்த விளையாட்டாளர்களை உருவாக்குவதற்கும் துணை புரிந்துள்ளது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் நிர்வாகியாகவும் இருந்த காலந்தொட்டு இந்த உதவி கிடைத்து வருவதாக அக்குழுவின் தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் ஜோஹான் கமால் ஹமிடோன் கூறினார்.

பயிற்றுநர் டான் செங் ஹோ தலைமையிலான சிலாங்கூர் குழு மாநில அரசின் உதவியின் மூலம் முறையான பயிற்சி மையம் உள்பட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி தார்மீக ரீதியாகவும் மாநில அரசு எங்களுக்கு உதவி வருகிறது. மந்திரி புசாராக பதவியேற்றப் பின்னரும் சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் முன்னேற்றத்தில் அவர் தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்தார். ஆண்டுக்கு மூன்று முறை எங்களுடன் சந்திப்பு நடத்தி கருத்துப் பரிமாற்ற செய்து கொள்வார் என்றார் அவர்.

கடந்த 2015ஆம் ஆண்டில் மலேசியக் கிண்ணத்தை வென்றது அமிருடினின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக விளங்குகிறது. விளையாட்டாளர்களின் திறனை வெளிக்கொணர அமைக்கப்பட்ட மேரா கூனிங் கால்பந்து அகாடமியும்  அவரின் சாதனையாக கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

முறையான நிர்வாகம் மற்றும் விளையாட்டாளர்களின் நலனில் அக்கறை காரணமாக சம்பள பாக்கி உள்ளிட்ட எந்தவொரு பெரிய சிக்கல்களிலும் இக்குழு இதுவரை சிக்கியதில்லை என்றும் அவர் சொன்னார்.


Pengarang :