ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலிவு விற்பனை வழி வாழ்க்கைச் செலவினம் குறைப்பு- மந்திரி புசார் கூறுகிறார்

ஷா ஆலம், செப் 22- சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் மலிவு விற்பனையின் வாயிலாக பொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதில் மாநில அரசு வெற்றி கண்டுள்ளது.

கோழி மற்றும் முட்டைப் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய இடையூட்டு வியூகத் திட்டமாகவும் இந்த ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பல மாங்களாக அல்லது ஆண்டுகளாக பொது மக்கள் எதிர்நோக்கி வந்த வாழ்க்கைச் செலவின பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் உதவக்கூடிய திட்டமாக இந்த மலிவு விற்பனைத் திட்டம் விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு தேசிய தினத்தின் போது நான் வெளியிட்ட இந்த மலிவு விற்பனை தொடர்பான அறிவிப்பு, அதிக தேவை உள்ள உணவுப் பொருள்களான கோழி மற்றும் முட்டை விநியேகத்தில் நிலவி வந்த பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காண்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டுப் பெருநாள் காலத்தில் இவ்விரு உணவுப் பொருள்களின் விநியோகம் போதுமானதாக இருந்தது. நாம் சிறப்பான முறையில் செயல்பட்டதை நிருபிக்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ். ஆர்க்கிட் மண்டபத்தில்  நடைபெற்ற ஜூவாலான் ஏஹ்சான் மலிவு விற்பனையின் பாராட்டு நிகழ்வு மற்றும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் புதிய சின்னத்தின் வெளியீடு ஆகிய நிகழ்வுகளுக்குத் தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்தின் வாயிலாக பொது மக்கள் குறைவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த பி.கே.பி.எஸ். பணியாளர்களுக்கு நாம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனையை நடத்த பி.கே.பி.எஸ். வசமுள்ள கையிருப்பில் 10 முதல் 15 விழுக்காட்டுத் தொகையை தாங்கள் பயன்படுத்தியதாகவும் அமிருடின் சொன்னார்.

 


Pengarang :