ECONOMYMEDIA STATEMENT

சுங்கத் துறையின் சோதனையில் வெ.32 லட்சம் மதிப்புள்ள கடத்தல் சிகிரெட்டுகள் பறிமுதல்

குவாந்தான், செப் 30- அரச மலேசிய சுங்கத் துறையின் பகாங் மாநிலப் பிரிவு மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் 32 லட்சத்து 6 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 24,000 கார்ட்டன் சிகிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

பகாங் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான பறிமுதல் நடவடிக்கை இதுவாகும் என்று மாநில சுங்கத் துறை இயக்குநர் முகமது அஸ்ரி செமான் கூறினார்.

கடந்த 13ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் குவாந்தான்-சிகாமாட் சாலையின் 57.6வது கிலோ மீட்டரில் எட்டு டன் லோரி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த சிகிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அந்த லோரி கிழக்குக் கரை மாநிலத்திலிருந்து தென் மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த லோரியைச் சோதனையிட்ட போது அதில் 384,000 வெள்ளி மதிப்புள்ள 48 லட்சம் சிகிரெட்டுகள் இருந்தன. இதற்கான வரியுடன் சேர்த்து இந்த சிகிரெட்டின் மொத்த மதிப்பு 32 லட்சத்து 6ஆயிரம் வெள்ளியாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் 1967ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் கீழ் 40 வயது மதிக்கத்தக்க  ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அந்த லோரியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

தென் மாநிலங்களில்  கடத்தல் சிகிரெட்டுகளை விநியோகிப்பதற்கு கிழக்குக் கரை நெடுஞ்சாலை மற்றும் குவாந்தான்-சிகாமாட் நெடுஞ்சாலையை சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

காவல் துறையின் பிடியிலிருந்து தப்புவதற்காக இக்கும்பல் இரவு நேரங்களில் அல்லாமல் பகல் வேளைகளில் தங்கள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொள்வதைக் தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :