ECONOMYMEDIA STATEMENTPBT

நவம்பர் வரை வெ.19 லட்சம் வர்த்தக லைசென்ஸ் கட்டணம் வசூல்-  செலாயாங் நகராண்மைக் கழகம் தகவல்

கோம்பாக், டிச 22- இவ்வாண்டு நவம்பர் வரை இணைய பரிவர்த்தனை வாயிலாக 19 லட்சத்து 79 ஆயிரத்து 564 வெள்ளி வர்த்தக லைசென்ஸ் கட்டணத்தை செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது.

மொத்தம் 2,339 பரிவர்த்தனைகள் வாயிலாக இந்த கட்டணம்  வசூலிக்கப்படுவதாக கூறிய நகராண்மைக் கழகத்  தலைவர் டத்தோ முகமது யாசிட் சைரி, அங்காடிக் கடை வாடகை மூலம் மேலும் 288,668.50 வெள்ளி பெறப்பட்டது என்றார்.

இவை தவிர, கட்டிட  மற்றும் திட்டமிடல் பெர்மிட் மூலம் 231,145.50 வெள்ளியும் பல்வேறு குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் 42,925 வெள்ளியும் பெறப்பட்டன என்று நகராண்மைக் கழகத்தின் இவ்வாண்டிற்கான 12வது மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

மதிப்பீட்டு வரிகளை இணையச் சேவைகளைப் பயன்படுத்தி மைஎம்பிஎஸ், லஸாடா, ஷோப்பி, சிட்டிஸன் இ-பெய்மெண்ட் (செப்பாட்) வாயிலாக செலுத்த பொது மக்கள் ஊக்குவிக்கப் படுவதாக அவர் மேலும்  கூறினார்.

வணிகர்கள் வர்த்தக லைசென்ஸ்களை புதுப்பிப்பதற்கு ஏதுவாக மெனாரா எம்.பி.எஸ். கீழ்த்தளத்தில் இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை முகப்பிடங்கள் திறக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

திங்கள் தொடங்கி வெள்ளி வரை காலை 8.30 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரையிலும் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் இந்த முகப்படங்கள் செயல்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :