ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எம்.ஏ.சி.சி. விசாரணையில் பெரும் புள்ளிகள் பாதுகாக்கப்பட  மாட்டார்கள்- பிரதமர் உறுதி

பெட்டாலிங் ஜெயா, டிச 23- ஊழலில் ஈடுபட்ட யாரையும் நாட்டின் அமலாக்கத் துறை காப்பாற்றாது என்பதை மெனாரா இல்ஹாம் கட்டிடத்தைப் பறிமுதல் செய்து அதன் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உயரிய விருதுகளையும் சர்வ வல்லமையும் கொண்ட செல்வாக்குள்ள தரப்பினர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக அந்த அமலாக்க அமைப்பு விசாரணையை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் இடமளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உயர்நெறி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நீதித்துறையும் அமலாக்கத் துறையும் முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும் என்பதோடு ஊழல்வாதிகளுக்கு எதிராக தைரியமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

எம்.ஏ.சி.சி. பதவி மற்றும் அந்தஸ்துக்கு அப்பாற்பட்டு தனது விசாரணையை மேற்கொள்ளட்டும். அவ்வாறு செய்யாவிட்டால் செல்வாக்குள்ளவர்களை விட்டு விட்டு நெத்திலி மீன்களை மட்டும் பிடிக்கிறோம் என்று குறை கூறுவார்கள் என்றார் அவர்.

விசாரணை நடைபெறட்டும். அப்போதுதான் அதிகார வர்க்கத்தால் தலைவர்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்பது தெரியவரும். விசாணையை மேற்கொள்வதற்குரிய பொறுப்பு எம்.ஏ.சி.சி.க்கு உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்குள்ள கோத்தா டாமன்சாரா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தலைநகர், ஜாலான் பிஞ்சாயில் உள்ள மெனாரா இல்ஹாம் கட்டிடத்தை பறிமுதல் செய்யும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை குறித்து கருத்துரைத்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த 60 மாடிக் கட்டிடத்தைப் பறிமுதல் செய்வது தொடர்பான அறிவிப்பு இணைய ஏடு ஒன்றில் இம்மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.


Pengarang :