ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு 

கோலாலம்பூர், ஜன 6- ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை சிறிது அதிகரித்துள்ளது. மாநிலத்திலுள்ள 12 வெள்ள நிவாரண மையங்களில் நேற்றிரவு 1,153 பேர் தங்கியிருந்த வேளையில் இன்று அந்த எண்ணிக்கை 1,197 பேராக உயர்வு கண்டது.

கோத்தா திங்கி மாவட்டத்திலுள்ள எட்டு துயர் துடைப்பு மையங்களில் 793 பேரும் மெர்சிங்கில் உள்ள இரு மையங்களில் 277 பேரும் ஜோகூர் பாருவிலுள்ள ஒரு மையத்தில் 43 பேரும் குளுவாங்கிலுள்ள ஒரு மையத்தில் 84 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம்  வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் உள்ள நான்கு ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதாக வெள்ளம் தொடர்பான அகப்பக்கம் கூறியது. சரவா மாநிலத்தின் சுங்கை செரியான், பகாங் மாநிலத்தின் ரொம்பினில் உள்ள சுங்கை கெராத்தோங் மற்றும் சுங்கை ரொம்பின், குளுவாங் மாவட்டதின் சுங்கை கஹாங் ஆகியவையே அந்த ஆறுகளாகும்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் 21 சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. 

இதனிடையே, சரவா மாநிலத்தின் பெத்ரா ஜெயா, கம்போங் பிந்தாவாவில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட ஒன்பது வீடுகளைச் சேர்ந்த 38 பேர் கூச்சிங்கில் திறக்கப்பட்டுள்ளத தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :