ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இளைஞரின் துணிகரச் செயல்- கடலில் குதித்த இருவரை விரைந்து காப்பாற்றினார்

ஜோர்ஜ் டவுன், ஜன 16- கடலில் குதித்த ஒரு ஜோடியை ஆடவர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் பாய்ந்து காப்பாற்றினார். இந்த துணிகரச் சம்பவம் பினாங்கு பாலத்தில் பிறை நோக்கிச் செல்லும் தடத்தின் 2.8வது கிலோ மீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்தது.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அந்த ஜோடி அப்பாலத்தின் ஓய்வுப் பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பினாங்கு பாலத்தில் இருவர் விழுந்தது தொடர்பில் நேற்றிரவு 7.49 மணியளவில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது கடலில் விழுந்ததாக கூறப்படும் முப்பது வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் காப்பாற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

ஹோண்டா சிவிக் காரில் வந்த அந்த ஜோடி பினாங்கு பாலத்தின் ஓய்வுப் பகுதியில் தங்கள் வாகனத்தை நிறுத்தியதை தொடக்கக் கட்டத் தகவல்கள் கூறுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அங்கு அவ்விருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருமே கடலில் குதித்துள்ளனர். அங்கிருந்த ஆடவர் ஒருவர் மின்னல் வேகத்தில் கடலில் குதித்து அவ்விருவரையும் காப்பாற்றியுள்ளார் என்பது அங்கிருந்த பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தெரியவந்தது என்று அவர் கூறினார்.

கடலில் விழுந்த அவ்விருவரையும் அந்த ஆடவர் காப்பாற்றிய வேளையில் அதிர்ஷ்டசமாக அங்கிருந்த மீன்பிடி படகு மூலம் அவர்கள் பத்து உபான் கரைக்கு கொண்டு வரப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பத்து உபானில் தயார் நிலையில் இருந்த போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

அவ்விருவரும் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் தலையில் காயமடைந்த ஆடவருக்கு தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :