ECONOMYMEDIA STATEMENT

 போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரின் பேரில் இரு பெண்கள் கைது

கோலாலம்பூர், பிப் 25- சுபாங் ஜெயாவில் கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ்காரர்களுக்கு எதிராக சின மூட்டும் வகையில் நடந்து கொண்டதோடு அவர்களை பணி செய்ய விடாமலும் தடுத்த புகாரின் பேரில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்றைய தினம் இரவு 11.10 அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் ஜாலான் எஸ்.எஸ்.15/4ஜி சாலையில் இரு பெண்கள் பயணம் செய்த பெரேடுவா மைவி காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்த முற்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.

தங்களின் அடையாள அட்டையை காட்டி அறிமுகப்படுத்திக் கொண்ட அப் போலீஸ்காரர்கள், அவ்விரு  பெண்களிடமும் அடையாள கார்டை காட்டும்படி கேட்டுள்ளனர். எனினும் அவ்விரு பெண்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளனர்.

அப்பெண்களில் ஒருவர் போலீஸ் சோதனையை தனது கைப்பேசி வழி பதிவு  செய்ததோடு போலீசாரின் பணி குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்த காரணத்திற்காக தண்டனைச் சட்டத்தின் 186 வது  பிரிவின் கீழ்  29 மற்றும் 37 வயதுடைய அவ்விரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அவ்விரு பெண்களும் இரு தினங்களுக்குத் தடுத்து வைக்கப் பட்டப் பின்னர் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப் பட்டதாகவும் மேல் நடவடிக்கைக்காக இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை துணை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அமலாக்கத் தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி பொது மக்களைக்  கேட்டுக் கொண்ட அவர், சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு சின மூட்டும் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :