ECONOMYhealthMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் டிங்கி சம்பவங்கள்  அதிகரிப்பு-  கடந்த வாரம் இருவர் உயிரிழப்பு

கோலாலம்பூர், மார்ச் 2 –  நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து   வருகின்றன.  கடந்த  பிப்ரவரி   18ஆம் தேதி முதல்  பிப்ரவரி  24 ஆம் தேதி வரையிலான எட்டாவது நோய்த் தொற்று வாரத்தில்   டிங்கி காய்ச்சல் பாதிப்புக்கு  3,572 பேர்  ஆளாகினர்.

அதற்கு முந்தைய வாரத்தில்    3,483 பேர் டிங்கி காய்சலால் பாதிக்கப் பட்டனர்.   டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இது காட்டுவதோடு இந்நோயினால்  இரண்டு மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக  சுகாதார  தலைமை இயக்குனர்   டாக்டர்  ராட்சி அபு ஹசான்  தெரிவித்தார்.

இவ்வாண்டு இதுவரை  டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  இதுவரை   29,113 பேராக  அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டின் முதல்   8 வாரங்களில் டிங்கி காய்ச்சல் மரணம்  எண்ணிக்கையும்  16 ஆக உயர்ந்துள்ளது.

எட்டாவது நோய்த் தொற்று வாரத்தில்  டிங்கியின்  தாக்கம் அதிகம் உள்ள 196 இடங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை  155 ஆக இருந்ததாக ராட்ஸி அறிக்கை ஒன்றில் கூறினார்.


Pengarang :