NATIONAL

35 குற்றப் பதிவுகளை அலட்சியப்படுத்தினார்- தொலைத் தொடர்பு சாதன விற்பனையாளருக்கு வெ.1,000 அபராதம்

ஷா ஆலம், டிச 21- ஊராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட 35 குற்றங்களுக்கான அபாரதத்தை செலுதத் தவறியதால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனக் கடையின் உரிமையாளர் நேற்று தெலுக் டத்தோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அந்த 40 வயது ஆடவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,000 வெள்ளி அபராதமும் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதச் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்ததாக கோல லங்காட் நகராண்மைக் கழகம் கூறியது. அந்த ஆடவர் மீது 2007ஆம் ஆண்டு கோல லங்காட் நகராண்மைக் கழக விளம்பர துணைச் சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக அது தெரிவித்தது.

அந்த தொலைத் தொடர்பு சாதனக் கடை உரிமையாளர் நகராண்மைக் கழகத்தின் அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகளை வைத்திருந்தார். தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த ஆடவர் ஒப்புக் கொண்டு அபராதத் தொகையைச் செலுத்தினார் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை வைத்தது, வர்த்தக லைசென்ஸ் இன்றி கடை நடத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவ்வாடவருக்கு 35 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டிருந்தன.

மாஜிஸ்திரேட் கைருள் ஃபார்ஹி யூசோப் முன்னலையில் நடைபெற்ற இந்த வழக்கில் கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் சார்பில் ஹஸ்ரிசால் அப்துல் ரஹிம் ஆஜரானார்.


Pengarang :