EKSKLUSIF

பத்து ஆண்டுகளுக்கு பிறகு சிலாங்கூர் மைசெல் மூலம் ஐவருக்கு பிறப்பு பத்திரம்

ஷா ஆலம், மே 25:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க அரசாங்கம், ஏழ்மை ஒழிப்பு மற்றும் தோட்ட தொழிலாளர்கள் ஆட்சிக் குழு உறுப்பினர் கீழ் செயல்படும் மைசெல் மூலம் இன்று ஐந்து பிள்ளைகளுக்கு பிறப்புரிமை எடுத்து கொடுக்கப் பட்டுள்ளது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் கூறினார்.

பத்து ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் திருமதி பூங்கொடி சுப்பிரமணியம் இன்று தனது பிள்ளைகளான தர்ஷாயினி (12வயது), குமாரகுரு (10 வயது), சிவசக்ரவர்த்தி (8 வயது), புருஷோத்தமன்  (6 வயது) மற்றும் விஷ்வவினோதினி (4 வயது) ஆகியோரின் பிறப்பு பத்திரம் மைசெல் மூலம் பெற்று கொண்டதில் பெருமிதம் கொண்டார்.

மேலும் கூறுகையில் கணபதி ராவ், மத்திய அரசாங்கம் இந்தியர்களின் குடியுரிமை சிக்கல்களில் வாய்ஜாலம் காட்டி வருகிறார்கள் என்று விவரித்தார். பலமுறை மைடப்தார் இயக்கத்தை நடத்தி வந்தாலும் எப்போதும் போல எந்த பயனும் இல்லை என்று கூறினார். 2016-இல் இருந்து இன்று வரை பத்து நீல நிற அடையாளம் அட்டையும் மற்றும் எட்டு பிறப்பு பத்திரம் மைசெல் மூலம் பெற்று கொடுத்திருக்கிறது என்றார்.

இதுவரை 300 விண்ணப்பங்கள் மைசெல் மூலம் செய்திருக்கிறது என்றும் தெரிவித்த வேளையில் தனது மைசெல் அதிகாரிகளான திரு தர்மேந்திரா மற்றும் திருமதி நோர் லேலா ஆகியோர் முழுமையான சேவையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று விவரித்தார். தொடர்ந்து மைசெல் மையம் விண்ணப்பங்களை ஆராய்ந்து தேசிய பதிவு இலாகாவும் இணைந்து பணியாற்றும் என்று கூறினார்.

“மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் இயங்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் தேசிய பதிவு இலாகாவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிறப்பு பத்திரம் எடுக்க மொத்த செலவான ரிம 1000 நான்  ஏற்றுக் கொள்கிறேன்,” என்று கணபதி ராவ் கூறினார்.


Pengarang :