SUKANKINI

ஜெர்மனி, மெக்சிகோவை 4-1 கோல் கணக்கில் வீழ்த்தி கொண்பிஃடராசி கிண்ண இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது

ஸோசி(ரஷ்யா), ஜூன் 30:

கொண்பிஃடராசி கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் லியோன் கோரெட்ஸ்கா இரண்டு கோல்களை ஜெர்மனிக்கு   புகுத்தியது குறிப்பிடத்தக்கது.

மத்திய திடல் ஆட்டக்காரர் ஆன கோரெட்ஸ்கா ஆறாவது நிமிடத்திலும் எட்டாவது நிமிடத்திலும் கோல்களை லாவகமாக புகுத்தி ஜெர்மனியை முன்னணிக்கு கொண்டு சென்றார். அதன் பிறகு, தீமோ வெர்னர் மற்றும் அமீன் யோனெஸ் மேலும் இரண்டு கோல்களை ஜெர்மனிக்கு அடித்தனர் என்று ஏஎப்ஃபி செய்தி வெளியிட்டுள்ளது.

மார்க்கோ பாஃபியன் மெக்சிகோவின் ஒரேயொரு கோலை 89-வது நிமிடத்தில் தூரத்தில் இருந்து பிஃரி கீக் மூலம் புகுத்தினார். இறுதி ஆட்டத்தில் உலகக் கிண்ண வெற்றியாளரான ஜெர்மனி, சிலியை ஸேண்ட் பீட்டர்ஸ்பர்க் அரங்கில் சந்திக்க இருக்கிறது. மெக்சிகோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அணிகளும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்காக மாஸ்கோ அரங்கில் மோத இருக்கிறது.

இதற்கு முன்பு குழு நிலையிலான ஆட்டத்தில் சிலி மற்றும் ஜெர்மனியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கோரேட்ஸ்கா மற்றும் வெர்னர் ஆகிய இருவரும் இந்த கிண்ணத்தில் மூன்று கோல்களை அடித்து முதல் நிலையில் உள்ளனர் என்று ஏஎப்ஃபி செய்தி கூறியது.

#கேஜிஎஸ்


Pengarang :