MEDIA STATEMENT

பாக்காத்தான் ஹாராப்பான் மற்றும் பிரதமர் வேட்பாளர் நெருக்கடி

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சுயநலத்தை விட நாடு மற்றும் நாட்டு மக்களின் நலத்தை முன்நிறுத்தி சிறப்பு செய்தியை பின்வரும் ஊடக அறிக்கை வாயிலாக தெரிவித்தார்:-

ஊடக அறிக்கை

பாக்காத்தான் ஹாராப்பான் தொடர்ந்து பாக்காத்தான் ராக்யாட் கூட்டணி அமல்படுத்திய கலந்துரையாடல் மற்றும் அனைத்து கட்சிகளின் கருத்துகளை மதிப்பளிக்கும் முறையை பின்பற்ற வேண்டும்.

எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் சரிசமமான அளவில் பதவியும், அதன் தலைவர் ஒருங்கிணைப்பாளராகவே செயல்படுவார். எல்லா கூட்டங்களும் அனைத்து கட்சிகளை சேர்ந்த செயற்குழு கூட்டாக நடத்தப்படும்.

பெர்சத்து கட்சியின் தலைவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப அக்கட்சி பாக்காத்தான் ஹாராப்பான் ஆலோசகர் மற்றும் தலைவர் பொறுப்பு வகிப்பது, தேசிய முன்னணியின் பாணியை நாம் பின்பற்றுவது போல ஆகிவிடும்.

ஆக, எல்லா தரப்பினரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை வலுப்படுத்த தகுந்த முறையில் ஆராய்ந்து பழைய ஒருங்கிணைந்த கூட்டணியாக இருத்தல் அவசியம்.

அனைத்து தரப்பினரின் பலத்தையும் ஒன்றிணைத்து அம்னோ தேசிய முன்னணிக்கு எதிராக போராட எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் முறையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்த வேளையில் நாம் மிகவும் பொறுமை காக்க வேண்டும். துன் மகாதீர் முகமட் அவர்களின் தலைமைத்துவ ஆற்றல் மற்றும் பங்களிப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முடிவு எடுக்கப்படும் முன்பே அறிக்கைகள் வெளியிடாமல் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

இன ரீதியான அரசியலை நாம் எதிர்ப்போம்; மாறாக நீதியான மற்றும் மக்களாட்சி தத்துவத்தையும் கொண்டு செயல்பட உறுதி செய்கிறோம். மக்கள் சமூக நலத்தை கொண்ட திட்டங்களை செயல்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலை ஒழிப்போம். நமது போராட்டம் நாட்டின் தலைமைத்துவத்தை மட்டும் மாற்ற அல்ல மாறாக தேசிய முன்னணியின் காலங்காலமாக நடைமுறையில் உள்ள அரசியல்வாதிகளின் ஊழல், சட்ட முறைகேடுகள் மற்றும் பதவி துஷ்பிரயோகம் போன்றவை மாற்றப் பட வேண்டும்.

பாக்காத்தான் ஹாராப்பானின் பார்வை நாட்டின் கொள்கைகளை நோக்கி இருக்க வேண்டும். நாட்டின் முறையற்ற நிர்வாகம் மற்றும் 14வது பொதுத் தேர்தல் வெற்றியை நோக்கி ஒன்றிணைந்து செயல் பட வேண்டும். பதவி போராட்டம், அதிகாரம் மற்றும் வரம்பு மீறிய அறிக்கைகள் வெளியிடாமல் தலைவர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.

பொதுத் தேர்தலையொட்டி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட என்னை பாக்காத்தான் பிரதமர் பதவி வேட்பாளராக முன்மொழிந்த பரிந்துரையை நான் நிராகரிக்கிறேன்.

நம்மிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பாதிப்பை உண்டாக்கும் ஏனெனில் நமது வெற்றி பொது மக்கள் கையில் உள்ளது. நமது பலம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தேர்தல் இயந்திரங்களை மேம்படுத்தி மக்களின் ஆதரவை பெற முயல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்வார் இப்ராஹிம்

ஜூன் 17 , 2017

 

தமிழாக்கம்: கு. குணசேகரன் குப்பன்


Pengarang :