SELANGOR

கணபதி ராவ்: இந்தியர்களுக்கு சேவை செய்யவே 48 கிராமத் தலைவர்களை நியமித்துள்ளோம்

ஷா ஆலாம், மார்ச் 4:

சிலாங்கூரில் இந்தியர்களுக்கு சேவை செய்யவே பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்களை கிராம தலைவர்களாக, இந்தியர்கள் பரவலாக இருக்கும் பகுதிகளுக்கு 48 பேரை நியமித்துள்ளோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினரும் கோத்தா ஆலாம் ஷா சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.
மக்களின் குறைகளையும் அதன் தீர்வுகளையும் அடையாளம் கண்டு உடனுக்கு உடன் அப்பகுதி இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு முடிவு காணவே இவர்கள் நியமிக்கப்பட்டதாகவும்,அவர்களின் சேவை மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் இருப்பதாகவும் தங்களின் பணியை அவர்கள் சரியாக செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கம்போங் ஜாவா 8வது மையில் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில், அவ்வட்டார கெஆடிலான் கிளை தலைவர் மணிமாறனின் ஆதரவுடன் கிராம தலைவர் நடராஜா ஏற்பாடு செய்திருந்த “ ஸ்மார்ட் சிலாங்கூர் “ திட்டங்களின் விளக்க உரையும் வாக்காளர் பதிவும் என்னும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்பு அவர் இவ்வாறு தெரிவித்தார். பல வருடங்களுக்கு மேலாக இங்கேயே வசிப்பவர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை மாநில அரசாங்கம் பல உதவிகளையும் சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.

பக்காதான் சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த 8 வருடங்களாக சிறந்ததோரு ஆட்சியை வழங்கி வருகின்றது. மக்களின் செலவினங்களை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட அளவு 400 மில்லியன் செலவில் வீடுகளுக்கு இலவச தண்ணீர், தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம்,ஆலயங்களுக்கு மானியம்,ஆண்டுக்கு 125 மில்லியன் செலவில் மருத்துவ அட்டை ,மருத்துவ உதவிகள்,தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிறப்பு திட்டம்,இலவச பஸ் சேவை என்று பல உதவிகளையும் சலுகைகளையும் மாநில அரசு மக்களுகாக செய்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஶ்ரீ மூடா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பெசார்  அஸ்மின் அலியின் அரசியல்  செயலாளருமான சுஹாய்மி ஷாபியி சிறப்பு வருகையாளராக கலந்துக்கொண்டதுடன் இந்தியர்களின் நலனை பாதுகாப்பதில் மாநில அரசு முக்கியதுவம் அளித்து வருவதாகவும் சிலாங்கூர் மாநிலத்தின் திட்டங்களின் பதிந்துக்கொள்ளாதவர்கள் உடனடியாக பதிந்துக்கொள்ளும் படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

#வேந்தன்


Pengarang :