NATIONAL

வேதமூர்த்தி: என் மேல் தொடுக்கப்பட்ட எதிர்ப்புகள் தேவையற்றது?

புத்ரா ஜெயா, நவம்பர் 19:

பத்து ஆண்டுகளுக்கு முன் டச்சு தொலைக்காட்சிக்கு நான் அளித்த நேர்காணல் தொடர்பான காணொலி தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மலேசிய இந்தியர்கள் தங்களின் நியாயமான உரிமைக்காகவும் கோரிக்கைக்காகவும்  2007 நவம்பரில் தலைநகரையே குலுங்கச் செய்த மக்கள் எழுச்சிப் பேரணியை அமைதியாக நடத்தியதன் தொடர்பில் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் டச்சுத் தொலைக்காட்சி செய்தியாளருக்கு அளித்த நேர்காணல் அது’, என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார் என்று அவரின் அமைச்சின் வழி கிடைத்த மின்னஞ்சல் தகவல் அமைந்துள்ளது.

 

அதன் விபரம் வருமாறு:

அமைதியாக நடைபெற்ற அப்பேரணியில் கலந்து கொண்டவர்களின்மீது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் இரசாயனம் கலந்த நீரையும் போலீஸ் ஏவியதால் கலவரம் ஏற்படும் அளவிற்கு நிலவரம் கைமீறிப்போனது. பேரணியில் கலந்து கொண்ட சிலர்மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. காரணம், ஒரு போலீஸ்காரருக்கு இரத்தம் கசிந்தது. ஆனால், நூற்றுக் கணக்கான பேரணியாளர்களுக்கு கடுமையான காயமும் இரத்தக் கசிவும் ஏற்பட்டது கவனத்தில் கொள்ளப்படவில்லை.

நானும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளானேன். ஹிண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர். மலேசிய இந்திய சமுதாயத்தின் பிரச்சினையை ஐநா மன்றத்தின் பார்வைக்காக கொண்டு செல்வதற்காக ஜெனிவாவில் உள்ள அதன் தலைமையகத்தில் நான் இருந்தபோது என்னுடைய பன்னாட்டுக் கடப்பிதழை மலேசிய அரசு முடக்கியது. அத்துடன், விடுதலைப் புலிகளுடன் எனக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் மலேசிய அரசைக் கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் அம்னோ அரசு பிரச்சாரம் செய்தது.

பிரிட்டனில் நாடு கடந்து வாழநேரிட்ட ஐந்தாண்டு காலத்தில் ஐநா மன்றம், அமெரிக்க உள்துறை, அமெரிக்க காங்கிரஸ், இங்கிலாந்து பிரபுக்கள் சபை (நாடாளுமன்ற மேலவை) மற்றும் மக்கள் சபை,  உள்ளிட்ட அரசுசார் அமைப்புகளையும்,  ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’, ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’, பன்னாட்டு மனித உரிமை பாதுகாப்புக் குழுவினர், பன்னாட்டு வழக்கறிஞர் மன்றம், இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றம் போன்ற மனித உரிமை அமைப்புகளையும் அணுகி, மலேசிய இந்தியச் சமுதாயத்தின் நலிந்த நிலைபற்றி கருத்து பறிமாறினேன்.

இப்படி புலம் பெயர்ந்து ஐக்கிய இராஜியத்தில் வாழ்ந்த காலத்தில் என் நடவடிக்கை முழுவதையும் அம்னோ அரசாங்கமும் மலேசிய மக்களும் அறிந்திருந்தனர். “நான் என்றுமே இரகசியமாகச் செயல்பட்டதில்லை; திறந்த மனதுடனும் வெளிப்படைத் தன்மையுடனும்தான் எப்பொழுதும் இருக்கிறேன்.”

இதுவரை ஏறக்குறைய பத்தாயிரம் ஆலயங்கள் இடிக்கப்பட்டன; கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் நிர்க்கதியான நிலையில் உதவி கேட்டு வந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சேகரித்து வைக்கப் பட்டிருந்த என்னுடைய வழக்கறிஞர் அலுவலகத்தை காவல் துறை சூறையாடியது; 2007 நவம்பர் பேரணி சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மறைமுக உலகுடன் கைகோத்திருந்த போலீசாரால் இந்திய இளைஞர்கள் கடத்தல்காரர்களாகவும் போதைப் பொருள் பரிவர்த்தனை செய்பவர்களாகவும் உருமாற்றப்பட்டனர்.

நாடு விடுதலை அடைந்தபின் தங்களின் பாரம்பரிய தோட்டங்களில் இருந்து கட்டாயமாக இயம்பெயரச் செய்யப்பட்ட சுமார் எட்டு இலட்ச பாட்டாளிப் பெருமக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பிட வசதியும் வேலை-வாய்ப்பும் இன்றி அலைக்கழிக்கப்பட்டனர். இதனால்தான் புறம்போக்கு இடங்களில் வீடுகளையும் வழிபாட்டுத் தலங்களையும் அமைத்துக் கொள்ள நேரிட்டது. இந்தியச் சமுதாயத்திற்கு சமூக-பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதுடன் பலவகையாலும் அவப்பெயரும் நேரிட்டது.

அம்னோ அரசும் தேசிய நீரோட்டத்தில் பெரும்பான்மை இந்தியச் சமுதாயம் இணைய முடியாதபடி கொள்கைகளை வகுத்துக் கொண்டது. அம்னோ தலைமையிலான அரசில் காவல்துறை என்னுடைய பன்னாட்டு தொடர்புகளை தொடர்ந்து கண்காணித்தது. ஆனால், என் நடவடிக்கை எப்போதும் மலேசிய இறையாண்மைக்கு உட்பட்டுதான் இருக்கும்.

என்னுடைய பன்னாட்டு தொடர்பு, மனித உரிமை தொடர்பான நடவடிக்கைக் குறித்தெல்லாம் அறிந்திருந்தும் 2013, 13-ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் கடந்த தேசிய முன்னணியின் அமைச்சரவையில் எனக்கு இடம் அளிக்கப்பட்டது. அதற்குக் காரணம், இந்தியச் சமுதாயத்தின் நியாயமான கோரிக்கையைக்கூட நிறைவேற்றத் தவறிய குற்றத்தை அவர்கள் உணரத் தொடங்கியதுதான். ஆனாலும், ஹிண்ட்ராஃப் உடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி செயல்படாத நஜிப்பைக் கண்டு வெகுண்டதுடன் ஓராண்டுகூட அப்பத்தவியில் நீடிக்க முடியாமல் பதவியைத் துறக்க நேரிட்டது.

தொடர்ந்து துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணியுடன் சேர்ந்து ஹிண்ட்ராஃப் போராட்டம் தொடர்ந்தது. கடந்த கால போராட்ட வாழ்க்கைப் பற்றியும் இந்தியச் சமுதாயத்திற்காக மேற்கொண்ட சட்டப் போராட்டம் குறித்தும் துன் மகாதீரிடம் விளக்கப்பட்டது. பின்னர், 14-ஆவது பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்டப் பணியை நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து ஹிண்ட்ராஃப் தொடர்ந்த்து. அம்னோ ஆட்சியும் வீழ்த்தப்பட்டு தற்பொழுது துன் மகாதீர் தலைமையில் புத்தாட்சியும் புது மலேசியாவும் மலர்ந்துள்ளன.

தற்பொழுது, அமைச்சரவை உறுப்பினர்களுடன் இணைந்து இந்தியச் சமுதாயம், ஏனைய சிறுபான்மை சமுதாயங்களின் நியாயமான முன்னேற்றத்திற்காக செயல்படுகிறேன். புதிய அரசும் ஜனநாயக முறைப்படி அனைத்து மக்களுக்கும் நன்மை விளையும்படி ஆட்சி புரிகின்ற நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் இந்த நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மேன்மை அடைவர் என்ற நம்பிக்கையில் கடமையைத் தொடர்கிறேன் என்று பொன்.வேதமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்

தகவல்: மலேசியா கினி


Pengarang :