NATIONALRENCANA PILIHAN

டோல் கட்டணத்தை குறைக்கும் வழிவகைகளை பிளஸ் வகுத்து வருகிறது

கோலாலம்பூர், ஜன.21-

அமைச்சரவையில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட முடிவிற்கேற்ப டோல் கட்டணங்களைக் குறைக்கவும் வியூகத்தை உறுதிப்படுத்தவும் பிளஸ் மலேசியா நிறுவனம் அரசாங்கத்துடன் விவாதித்து வருகிறது.
நடப்பில் உள்ள குத்தகை உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதோடு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று பிளஸ் தலைவர் டத்தோ முகமது நாசிர் அப்துல் லத்திப் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நாட்டின் மிகப் பெரிய நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான பிளஸ் நிறுவனத்தில் கஸானா நேஸனல் பெர்ஹட் (யுஇஎம் குழுமம்) 51 விழுக்காடு மற்றும் ஊழியர் சேமநிதி குழுமம் 49 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் முடிவை தமது தரப்பு ஏற்றுக் கொள்வதாக அவர் சொன்னார்.
“சிறந்த நெடுஞ்சாலை சேவையைத் தொடரவும் மக்களுக்கு பாதுகாப்பான சுகமான பயணத்தை உறுதி செய்யவும் பிளஸ் கடப்பாடு கொண்டுள்ளது” என்றார் அவர்.

பிளஸ் நிறுவனத்தின் குத்தகை உடன்பாட்டை நிலைநிறுத்தவும் அதன் தவணையை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அமைச்சரவை முடிவெடுத்தது. 2028 ஆம் ஆண்டில் நிறைவுறும் குத்தகை தவணையை 2058ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதோடு டோல் கட்டணங்களை வரும் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி 18 விழுக்காடு குறைக்கவும் அமைச்சரவை இணக்கம் தெரிவித்தது.


Pengarang :