ECONOMYPBTSELANGOR

பொது முடக்கத்தால் பொங்கல் வியாபாரம் பாதிப்பு- இந்தியர்களின் இழப்பிற்கு யார் பொறுப்பேற்பது? ஜஸ்டின் ராஜ் கேள்வி

ஷா ஆலம், ஜன 13-  இன்று  தொடங்கி நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வியாபாரத்திற்கு பொருள்களைத் தயார் படுத்தி வைத்திருந்த சிறு வணிகர்களுக்கு  அரசாங்கம் அறிவித்துள்ள  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பேரிடியை ஏற்படுத்தியுள்ளதாக கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஜஸ்டின் ராஜ் கூறினார்.

கடந்தாண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்ட முதலாவது பொது முடக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமலிருக்கும் இந்திய சிறு வியாபாரிகளுக்கு பொங்கல் சமயத்தில் அமல்படுத்தப்பட்ட இரண்டாவது பொது முடக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த வியாபார பாதிப்பினால் இந்திய வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு யார் பொறுப்பேற்பது என்று சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினருமான அவர் கேள்வியெழுப்பினார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பல வணிகர்கள்  தங்கள் வசமிருக்கும் முதலீட்டில் பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, தோரணம், பூக்கள் உள்ளிட் பொருள்களை பெருமளவில் வாங்கி வைத்துள்ளனர். அந்த பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரும் தருணத்தில் அரசாங்கம் பொது முடக்கத்தை அறிவித்து அவர்கள் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது.

பொங்கல் திருநாளுக்காக விற்கப்படும் பொரும்பாலான பொருள்கள் விரைவில் கெட்டுப் போகக்கூடிய விவசாயப் பொருள்களாகும். இவற்றை வைத்திருந்து பிறிதொரு சமயத்தில்  விற்கவும் முடியாது. வேறு நோக்கத்திறக்காக பயன்படுத்தவும் இயலாது. பொங்கல் வியாபாரத்திற்காக அவர்கள் செய்து முதலீடுகள் எல்லாம் விழலுக்கிறைத்த  நீராய் வீணாகத்தான் போகும் என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் இந்திய சமுதாயத்திற்கு  மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்காமல் போனது யார் குற்றம் என்றும் ஜஸ்டின் ராஜ் கேள்வியெழுப்பினார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் அதிமுக்கியதுவம் வாய்ந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், அதன் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் முன்கூட்டியே வெளியிட்டிருந்தாலோ அல்லது அந்த அமலாக்கத்தை ஓரிரு நாட்கள் ஒத்தி வைத்திருந்தாலோ இந்திய வியாபாரிகளுக்கு இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று அவர் கூறினார். 

இந்திய சமூகத்தின் இந்த மனக்குமுறல் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இந்திய சமூகம் சார்பில் இடம் பெற்றிருக்கும் கட்சியான மஇகாவின் கடமையாகும் என்றும் அவர் சொன்னார். 

 


Pengarang :