ECONOMYPBTSELANGOR

கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி 110,000 பேர் பயன் பெற்றனர்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மார்ச் 4- சிலாங்கூர் அரசின் கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி 108,545 பேர் பயனடைந்துள்ளனர். சுமார் 2 கோடியே 47 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டின் வழி மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் வாயிலாக அவர்கள் பயன்பெற்றனர்.

கித்தா சிலாங்கூர் தொகுப்பில் அறிவிக்கப்பட்ட 20 திட்டங்களில் ஆறு திட்டங்கள் முழுமையடைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முன்களப் பணியாளர்களுக்கான உணவு உதவித் திட்டம் மற்றும் யாயாசான் சிலாங்கூர் கல்விக் கடனுதவி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக அவர்கள் பயன்பெற்றதாக அவர் சொன்னார்.

பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு வாடகை ரத்து மற்றும் வாடகை ஒத்திவைப்பு,  விவேக வாடகை திட்டம் ஆகியவற்றின் வாயிலாக மக்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கித்தா சிலாங்கூர் திட்ட மேம்பாட்டை கண்காணித்து வரும் சி5ஐ ஸ்மார்ட் சிலாங்கூர் நடவடிக்கை அறைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலவச கோவிட்-19 பரிசோதனை, நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களுக்கு கொண்டுச் செல்லும் பஸ் சேவை உள்ளிட்ட 14 திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை தவிர, உணவுக் கூடை உதவித் திட்டம், இ-டாப்போர் திட்டம், நாடி எனப்படும் வர்த்தக கடனுதவித் திட்டம் ஆகியவையும் தொடர்ந்து அமலாக்கம் கண்டு வருகிறது என்றார் அவர்.

சுமார் 7 கோடியே 38 வெள்ளி மதிப்பிலான 20 திட்டங்கள் அடங்கிய கித்தா சிலாங்கூர் உதவித் தொகுப்பு திட்டத்தை மந்திரி புசார் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி அறிவித்தார்.


Pengarang :