ECONOMYNATIONAL

ரமலான் சந்தைகளில் விதிமீறல்- அபராதம் விதிக்க ஊராட்சி மன்றங்களுக்கு அனுமதி

கோலாலம்பூர், ஏப் 15– நோன்பு தொடங்கி இரு தினங்களே ஆன போதிலும் ரமலான் சந்தைகளில் காணப்படும் எஸ்.ஒ.பி. விதிமீறல்கள் புதிய கோவிட்-19 தொற்று மையங்கள் உருவாக வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோன்பு துறப்பதற்காக உணவு வாங்க ரமலான் சந்தைக்கு வருவோர்  சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியதால்  கூட்ட நெரிசல் ஏற்பட்டதை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக  பகிரப்பட்டு வருகின்றன.

இத்தகைய  விதிமீறல் சம்பவங்கள் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யக்கோப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவ்விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறுவோருக்கு  ஊராட்சி மன்றங்களின் டத்தோ பண்டார்கள், தலைவர்கள் மற்றும் கிரேட் 19 அமலாக்க அதிகாரிகளுக்கு  அபராதம் விதிக்கும் அதிகாரம் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் கூறியது.

நாட்டின் பல பகுதிகளில் ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படாதது தொடர்பில் தேசிய  பாதுகாப்பு மன்றம் பொதுமக்களிடமிருந்து பல புகார்களை பெற்றுள்ளது என்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கோவிட்-19 நோய்ப் பரவல் இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளதால் இவ்விகாரத்தை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். இதன் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும்படி ஊராட்சி மன்றங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

 


Pengarang :