NATIONAL

நஜிப் ஒப்புக் கொண்டதால் 1எம்டிபி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை

ஷா ஆலம், ஜனவரி 25:

தவறான நிர்வாக செயல்பாட்டினால் 1எம்டிபி மெகா திட்டம் தோல்வியை தழுவியதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டதால் இவ்விவகாரம் முடிவை எட்டிவிட்டதென யாரும் கருதிடக்கூடாது. நஜிபின் இந்த ஒப்புதல் மூலம் சம்மதப்பட்ட நிறுவனம் நாட்டின் வளங்களையும் சொத்தையும் கொள்ளையடித்து சென்று விட்ட நிலையில் அதன் இழப்பினை மக்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டதாக கெஅடிலான் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சைஃபுடின் நசுத்துயோன் இஸ்மையில் குறிப்பிட்டார்.

தாம் ஒப்புக் கொண்டதால் 1எம்டிபி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக நஜிப் கருதிட வேண்டாம் என எச்சரித்த சைஃபுடின் இதனால் நஜிப் தாம் கலங்கமற்றவர் என்பதை நிலைநிறுத்த வேண்டினால்,அஃது தாமதமான ஒன்றாகி விட்டதாக விவரித்தார்.
இந்த ஒப்புதல் மூலம் நடப்பில் ப்லவேறு கேள்விகள் எழுவதாக கூறிய அவர் 1எம்டிபியால் எவ்வித லாபமும் இல்லாத நிலையில் சுமார் வெ50 பில்லியன் நஷ்டம் தான் ஏற்பட்டதாகவும் நினைவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி,இவ்விவகாரம் தொடர்பில் தொடக்கத்திலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த போது மௌனம் காத்த நஜிப் தற்போது மட்டும் வாய் திறந்திருப்பது ஏன்? எனும் கேள்வியே தற்போதைய முனுமுனுப்பாக இருக்கிறது.

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக நஜிபின் அரசியல் யுக்தியா இது என்றும் கேள்வி எழுப்பினார்.
நீண்டக்காலமாய் 1எம்டிபி விவகாரத்திற்கு எவ்வித தெளிவான பதிலையும் கொடுக்காமல் தட்டிக்கழித்த நஜிப் தற்போது வாய் திறந்திருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது.ஒரு காலக்கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பிட கூட மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையாகவே நஜிப் இவ்விவகாரத்தில் நேர்மையான போக்கினை கடைபிடிக்க விரும்பினால் நாட்டின் தணிக்கை குழு அறிக்கையினை பொது வெளியிட முன் வர வேண்டும் என்றார்.

மேலும்,1எம்டிபி விவகாரத்தின் தோல்வி மற்றும் அதன் இழப்பிற்கு காரணமானவர்களை நீதிக்கு முன் கொண்டு செல்லவும் வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர் தணிக்கை குழுவின் அறிக்கையை வெளியிட எவ்வித காரணமும் சொல்லாமல் நஜிப் அதனை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதை செய்ய நஜிப் மறுத்தால் அவர் உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுவதாக சைஃபுடின் கூறினார்.

1எம்டிபி நிறுவனம் மலேசிய அரசாங்கத்தின் வியூகத்தின் நிர்வாகமாக செயல்பட்ட நிலையிலும் நஜிப் நிதி அமைச்சர் எனும் வகையிலும் தனது கோரிக்கை நியாயமே என்றார்.
அதுமட்டுமின்றி, நஜிப் 1எம்டிபி நிறுவனத்தின் வாரியகுழுவின் ஆலோசகரும் கூட என்பதால் தவறான நிர்வாக செயல்பாட்டில் நஜிப்பிற்கும் பங்கு உண்டு என நினைவுறுத்தினார்.

#தமிழ் அரசன்


Pengarang :