SELANGOR

செய்தியைப் பரப்புவதற்கு முன்னர் அதன் நம்பகத் தன்மையை ஆராய்வீர் !

கோலா சிலாங்கூர், ஜனவரி 9:

ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன்னர் அதன் நம்பகத் தன்மையை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உண்மையில்லாத செய்திகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும் என்று புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் சுவைரியா சுல்கிப்ளி கூறினார்.

கோலசிலாங்கூரில் அனைத்துலக விமான நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாக அண்மைய காலமாக செய்தி ஒன்று பரவி வருவதை அவர் மேற்கோள் காட்டினார். அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து இந்த விமான நிலையம் கட்டப்படுவது குறித்த திட்டக் குறிப்பு ஒன்றை தான் பெற்றதாக அவர் சொன்னார்.

எனினும். மந்திரி பெசார் அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட பின்னர் இது போன்ற திட்டம் ஏதும் இல்லை என்று தமக்கு தெரிய வந்தது என்றார் அவர். எனவே, இது போன்ற தகவல்களைப் பரப்புவதன் மூலம் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் பொறுப்பற்ற தரப்பினர் தங்களின் இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, கோலசிலாங்கூரில் விமான நிலையம் ஒன்று கட்டப்படுவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபேஸ்புக்கில் தகவல் பரவியது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆயினும், இந்த செய்தி தவறானது என்று கோலசிலாங்கூர் மாவட்ட மன்றம் தெளிவுபடுத்தியது.


Pengarang :