NATIONALSELANGOR

தண்ணீரைச் சேமிக்க உதவும் ஸ்பான் நீர் குழாய்கள்!

ஷா ஆலம், மார்ச் 13:

பழைய தண்ணீர் குழாய்களுக்குப் பதிலாக நவீன குழாய்கள் பொருத்திய தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) நடவடிக்கையானது பயனீட்டாளர்கள் குறிப்பாக பி40 பிரிவினர் தண்ணீரை மிச்சப்படுத்துவதற்கு உதவியுள்ளது.
தூய்மையான குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஏற்ப இந்த 3 நட்சத்திர குழாயானது நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 1.5 லிட்டர் முதல் 4 லிட்டர் அளவு தண்ணீரை வெளியேற்றும். முன்பிருந்த குழாய் நாளொன்றுக்கு 8 முதல் 10 லீட்டர் வரை தண்ணீரை வெளியேற்றும் என்று ஸ்பான் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அகமது ஃபைசால் அப்துல் ரஹ்மான் கூறினார்.

நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் சிலாங்கூரைச் சேர்ந்த 880 வீடுகள் உட்படுத்தப்பப்பட்டுள்ளன. தண்ணீரை சேமிக்கும் விழிப்புணர்வை அதிகரிக்க இத்திட்டம் முக்கிய பங்காற்றும் என்று கம்போங் ரந்தாவ் பாஞ்சாங் கிள்ளானில் விவேக தண்ணீர் பயனீட்டு இயக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் தண்ணீர் நடவடிக்கை பிரிவுத் தலைவர் அபாஸ் அப்துல்லா, செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :