SELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றின் எதிரொலி வேலை வாய்ப்பு சந்தை ஒத்தி வைப்பு

ஷா ஆலம், அக்-  வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடைபெறவிருந்த 2020 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று 13 புதிய சம்பவங்களுடன் சேர்த்து சிலாங்கூரில் மொத்தம் 2,284 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க 8,150 பதிவு செய்திருந்த நிலையில் நோய்த் தொற்றின் பரவல் திடீரென அதிகரித்த காரணத்தால் பாதுகாப்பு கருதி அச்சந்தை ஒத்தி வைக்கப்படுவதாக இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் கூறினார்.

அந்த சந்தைக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.  மாநில சுகாதார இலாகா மற்றும் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் ஆலோசனையின் பேரில் இச்சந்தை பிறிதொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றார் அவர்.

இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் இம்மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடத்தப்படவிருந்த வேலை வாய்ப்பு சந்தையில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 


Pengarang :