NATIONALSELANGOR

தூய்மையின் முக்கியத்துவத்தை அந்நிய நாட்டினருக்கு உணர்த்த மேரு சட்டமன்ற உறுப்பினர் பிரசாரம்

மேரு, அக் 2- அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் தூய்மையின்
முக்கியத்துவத்தை வலியுறுத்துவற்காக மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது
ஃபாருள்ராஸி முகமது மொக்தார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறார்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் அத்தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும்
குப்பைகளை கால்வாய்களில் வீசும் பழக்கத்தை தடுப்பதற்காக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது.

அந்நியத் தொழிலாளர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல் காரணமாக
கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாவதாக
முகமது ஃபாருள்ராஸி கூறினார்.

கால்வாய்களில் குப்பைகள் வீசப்படும் சம்பவங்கள் தொடர்பில்
பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும்
வகையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு தூய்மையின்
முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளேன் என்றார்
அவர்.

இந்த விழிப்புணர்வு இயக்கம் கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கப்பட்ட போதிலும்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு
தற்போது மீண்டும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர்
குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், சுங்கை காப்பார் இண்டாவில் குப்பைகள் நிறைந்து காணப்படும்
கால்வாய் ஒன்றைப் பார்வையிட்டதோடு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு
ஏதுவாக ஊராட்சி மன்றத்தின் கவனத்திற்கும் இவ்விவகாரத்தை கொண்டு
சென்றார்.

தூய்மையைப் பேணுவதில் ஊராட்சி மன்றங்களை மட்டுமே நம்பியிராமல்
பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தினார்.


Pengarang :