PBTSELANGOR

செக்.16 அடுக்குமாடி குடியிருப்பில் சாலை சீரமைப்பு ஷா ஆலம் மாநகர் மன்றம் வெ.306,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 2- இங்குள்ள செக்ஷன் 16, பி.கே.என்.எஸ். குடியிருப்பு பகுதியில்
சாலைகளைத் தரம் உயர்த்தும் பணியில் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஈடுபட்டு
வருகிறது.

இந்த சீரமைப்புப் பணிகளுக்காக 306,000 வெள்ளியை மாநகர் மன்றம் ஒதுக்கீடு
செய்துள்ளதாக கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் முகமது நஜ்வான்
ஹலிமி கூறினார்.

அப்பகுதி மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும்
இத்திட்டம் .இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகும் என்று அவர் சொன்னார்.
அந்த சாலைகளைத் தரம் உயர்த்துவது தொடர்பில் கடந்த 2018ஆம் ஆண்டில்
மாநகர் மன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்து வரும் அந்த சாலைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தி வந்தோம் என்றார் அவர்.

இவ்வாண்டில்தான் இதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு சாலை
சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், இதன் மூலம் அப்பகுதி
மக்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் சௌகர்யமாகவும் மேற்கொள்ள முடியும்
என்றார்.

இதனிடையே, அப்பகுதியிலுள்ள தக்ராவ் விளையாட்டு மைதானத்தை தரம்
உயர்த்துவதற்காக 20,000 வெள்ளி மானியத்தை முகமது நஜ்வான் வழங்கினார்.

இந்த மைதானத்தை பொறுப்பற்றத் தரப்பினர் தவறான நோக்கத்திற்கு
பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்வதில் பொதுமக்கள் தங்களின் பங்கினை
ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :