SELANGORWANITA & KEBAJIKAN

பெண்களுக்குகெதிரான வன்முறையை நிறுத்தி குடும்ப அமைப்பை வலுப்படுத்துவீர்- மந்திரி புசார் கோரிக்கை

ஷா ஆலம், நவ 26- பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது தொடர்பான பிரசாரங்கள் யாவும் இதன் தொடர்பான 16 நாள் விழிப்புணர்வு இயக்கத்துடன் மட்டும் நின்று விடக்கூடாது. மாறாக இந்த விழிப்புணர்வு வாழ்வியலின் ஒரு அங்கமாக ஆக்கப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
வன்முறை என்பது தவறானது மற்றும் செய்யக்கூடாதது என்ற புரிதல் சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெண்களுக்கெதிரான வன்முறை தடுக்கப்படக்கூடிய ஒரு செயல் என்பதை உணர்த்தும் விதமாக இந்த 16 நாள் பிரசார இயக்கத்தின் நோக்கம் அமைகிறது என்றும் அவர் சொன்னார்.
குடும்ப வன்முறைக்கு எதிரான இந்த 16 நாள் இயக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதை மாநில அரசு வரவேற்கிறது. காரணம் இந்த சமூகப் பிரச்னை இனம் மற்றும் பொருளாதார அந்தஸ்தை தாண்டி அனைத்து நிலையிலான மக்களிடமும் காணப்படுகிறது என்றார் அவர்.
இங்குள்ள மாநில அரசு தலைமையகத்தில் நடைபெற்ற பாலின ரீதியிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
குடும்ப அமைப்பு முறையைக் காப்பதில் ஒவ்வொரு குடும்பமும் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கின்றன. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் சமூகம் மற்றும் சட்டத்தின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் குடும்ப வன்முறையின் எண்ணிக்கை 80 விழுக்காடு அதிகரித்து 254ஆக உயர்ந்துள்ளது சமூக நலத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.


Pengarang :