ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

நகர்களில் மரம் நடுவதில் சிலாங்கூர் அரசு தீவிரம்

ஷா ஆலம், ஜன 7– நகரங்களில்  மரம் நடுவதில் சிலாங்கூர் மாநில அரசு தீவிரம் காட்டவிருக்கிறது. வரும் 2030 ஆண்டுவாக்கில் நகர்ப்புறங்களில் கார்பன் அளவைக் குறைக்கும் இலக்கை அடையும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உலகம் பருவ நிலை மாற்றத்தைக் கண்டு வரும் இவ்வேளையில் அதிகமான பசுமைப் பகுதிகளை உருவாக்கும் தங்களின் இந்த முயற்சிக்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடலோரங்களில் அலைகளால் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க சதுப்பு நிலக் காடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதைப் போல் நகர்ப்புறங்களில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் மரங்களை நடுவதும் அவசியமாகும் என்று அவர சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டில் சுற்றுச்சூழலுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க  வேண்டும் என்பது நமது தலையாய நோக்கமாக உள்ளது. வாழ்வியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டு வளர்ச்சியடைந்த மாநிலம் என்ற அந்தஸ்தை பெறுவதில் எந்த பயனும் இல்லை என்றார் அவர்.

2021 முதல் 2025 வரை 10 கோடி மரங்களை நடும் இயக்கத்தையொட்டி இங்குள்ள சிலாங்கூர் நினைவுச் சின்ன வளாகத்தில் மரம் நடும் இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

‘பசுமை மலேசியா- நமது மரம், நமது வாழ்வு‘எனும் இந்த இயக்கத்தின் கீழ் முதலாவது ஆண்டில் 2 கோடி மரங்களை நடுவதற்கு  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Pengarang :