NATIONALUncategorized

அவசரகாலம்- தடுப்புக் காவல் மையமாக பயன்படுத்த எந்த கட்டிடத்தையும் அரசாங்கம் இரவல் பெற முடியும்

கோலாலம்பூர், ஜன 19- அவசரகாலத்தில் தற்காலிக தடுப்புக் காவல் மையங்களாக பயன்படுத்துவதற்கு எந்த கட்டிடத்தையும் அரசாங்கம் இரவலாகப் பெற முடியும்.

அவசரகால பிரகனடத்தின் கீழ் உள்ள சிறப்புச் சட்டத்தின் கீழ் இவ்வாறு செய்ய முடியும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி கூறினார்.

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பை தடுப்பதற்கு இந்த அவசரகாலச் சட்டம் பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

தற்காலிக தடுப்புக் காவல் மையமாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக எந்த கட்டிடத்தையும் இரவல் பெறுவதற்கான பரிந்துரையை செய்யும் அதிகாரம் அவசரகால மேலாண்மைக் குழுவின் கீழுள்ள தொற்றுப் பாதுகாப்புப் பிரிவுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் முக்கிய காரணமாக விளங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகள் குறுகிய இடத்தில் அடைத்து வைக்கப்படுவதே இதற்கு காரணம் என அவர் விளக்கினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை குறைப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக குற்றவாளிகளை தற்காலிக முகாம்களுக்கு மாற்றும் நோக்கில் புதிய சட்டத்தை நாம் உருவாக்குவதற்குரிய சாத்தியம் உள்ளது. இதன் மூலம் சிறைச்சாலைகளில் குற்றவாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதோடு அங்கு எஸ்.ஓ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

தண்டனை காலம் முடியும் தறுவாயில் உள்ள அதாவது விடுதலை பெறுவதற்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களே உள்ளவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கான சாத்தியம் குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்நோக்கத்திற்காக நாம் சட்டத்தில் திருத்தம் செய்யலாம். அல்லது மாமன்னரின் ஒப்புதலின் பேரில் தண்டனை காலத்தைக் குறைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :