NATIONALSELANGOR

தைப்பூசம்- எஸ்.ஒ.பி. விதிமுறைகள் மீறப்படவில்லை- துணை ஐ.ஜி.பி தகவல்

கோலாலம்பூர், ஜன 29– நாடு முழுவதும்  கொண்டாடப்பட்ட தைப்பூச விழாவின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) மீறப்பட்டது தொடர்பில் எந்த புகாரும் பெறப்படவில்லை என தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக  அமல்படுத்தப்பட்ட எஸ்.ஓ.பி. நடைமுறைகள் தைப்பூச விழாவில் கடைபிடிக்கப்பட்ட விதம் மனநிறைவளிக்கும் வகையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்த விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் இரத ஊர்வலம் நடத்தாமல் இந்துக்கள் தைப்பூச விழாவை கொண்டாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலானோர் வழிபாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என தேசிய  பாதுகாப்பு மன்றத்தின் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில் இதன் தொடர்பில் விதிமீறல்கள் நிகழ்ந்தது குறித்து  கண்காணிப்புக் குழுவிடமிருந்தோ பொதுமக்களிடமிருந்தோ  எந்த புகாரும் கிடைக்கவில்லை என்றார் அவர்.

இந்த விழாவை தன்மூப்பாக கொண்டாட யாரும் முயன்றதாக நாடு முழுவதும் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, இத்தைப்பூச விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் விதிகளை பின்பற்றி நடந்த காரணத்தால் நேற்றிலிருந்து இன்று வரை யாருக்கும் குற்றப்பதிவுகள் வழங்கப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது தெரிவித்தார்.

சாலைப் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் மூன்று குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன. எனினும் எஸ்.ஓ.பி. விதிமீறல் தொடர்பில் யாருக்கும் குற்றப்பதிவு வழங்கப்படவில்லை என அவர் மேலு கூறினார்.

பேராக் மாநிலத்தில் தைப்பூச விழா குறித்து கருத்துரைத்த மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடாலத்ராஷ் வாஹிட், மாநிலத்தில் தைப்பூச கொண்டாட்டம் கட்டுப்பாட்டில் இருந்ததோடு இரத ஊர்வலம் உள்பட எந்த விதிமீறிலும் நிகழவில்லை என்று சொன்னார்.

பினாங்கில் தைப்பூச விழாவின் போது பக்தர்கள் கூடும் ஆலயங்கள் அனைத்திலும்  மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது  போலீசார் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையில் கண்டறியப்பட்டது.


Pengarang :