ECONOMYNATIONALPBTSELANGOR

வர்த்தக ஸ்தாபனங்கள் இரவு 10.00 மணி வரை செயல்படும்

கோலாலம்பூர், ஜன 29– நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை  காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து  வர்த்தக ஸ்தாபனங்களுக்கான வியாபார நேரத்தை இரவு 10.00 மணி  வரை  நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மளிகைக் கடைகள், பல்நோக்கு கடைகள், வளர்ப்புப் பிராணிகள் தீவனக் கடைகள், சலவை நிலையங்கள், மூக்கு கண்ணாடி கடைகள் ஆகியவற்றுக்கு இந்த வியாபார நேரத் தளர்வு பொருந்தும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இதற்கு  இந்த வியாபாரங்கள்  அனைத்தும் இரவு 8.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டன. சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் வர்த்தக நேரத்தை இரவு 10.00 வரை நீட்டிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தக ஸ்தபானங்களுக்கு வழங்கப்பட்ட வெவ்வேறு வர்த்தக நேர அனுமதியினால் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் மற்றும் வியாபார நேரத்தை நீட்டிக்கக்கோரி வர்த்தகத் தரப்பினர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

வனத்துறை, மரத்தவளவாடங்கள் உள்பட வெட்டுமர நடவடிக்கைகளை உள்ளடக்கிய தொழில்கள் இன்று முதல் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் அவசரகாலச் சட்டத்தில் திருத்தம் செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமலாக்கத் தரப்பினரின் நடவடிக்கையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் சுய கட்டொழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :