ADN Pelabuhan Klang menunjukkan sampah haram dibuang berhampiran Lebuhraya Pulau Indah. Foto Facebook Azmizam Zaman Huri
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

குப்பைக் கொட்டும் பகுதிகளில் தீயிடல் சம்பவங்கள்- தகவல் தர கோலக் கிள்ளான் தொகுதி உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம், மார்ச் 4– குப்பைக் கொட்டும் பகுதிகளில் ஏற்படும் தீச்சம்பவங்களை தவிர்ப்பதற்கு ஏதுவாக சட்டவிரோதமாக குப்பைக் கொட்டும் லோரிகள் குறித்து தகவல் தரும்படி பொதுமக்கள் குறிப்பாக பூலாவ் இண்டா பாரம்பரிய கிராமம் மற்றும் கோலக் கிள்ளான் வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய தரப்பினர் மேற்கொள்ளும்  சட்டவிரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி திறந்த வெளி தீயிடல் சம்பவங்கள் நிகழ்வதாக கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.

சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படும் சம்பவங்கள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, போலீஸ், ஊராட்சி மன்றங்கள், நில அலுவலகம் அல்லது தம்மிடம் தகவல் அளிக்கலாம் என அவர் சொன்னார்.

அரசாங்க நிலங்கள்கூட ஆக்கரமிக்கப்பட்டு சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்களாக மாற்றப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மக்களின் அமைதிக்கும் குந்தகம் ஏற்படுகிறது என்றார் அவர்.

கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தவிர்க்க இத்தகைய சட்டவிரோத செயல்களைப் புரிவதை நிறுத்திக் கொள்ளும்படி அவர் சம்பந்தப்ட்டத் தரப்பினரை எச்சரித்தார்.

சதுப்பு நிலப்பகுதியை உள்ளடக்கிய சட்டவிரோத குப்பைக் கொட்டும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தீ ஏற்பட்டது. சுமார் நான்கு ஏக்கரை உள்ளடக்கிய பகுதியில் ஏற்பட்ட இத்தீச் சம்பவத்திற்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொளுத்தப்பட்டது காரணம் என கூறப்படுகிறது.


Pengarang :