MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகருடன் பக்கத்தான் சந்திப்பு

கோலாலம்பூர், மார்ச் 4– நாடாளுமன்றம் கூட்டப்படுவதன் அவசியம் குறித்து விவாதிப்பதற்காக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் இன்று மக்களவை சபாநாயகர் டத்தோ  அஸஹார் அசிசான் ஹருணை நாடாளுமன்றக் கட்டிடத்தில் சந்தித் தனர்.

இச்சந்திப்பு தொடர்பான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவசர காலத்தின் போது நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என்று அரண்மனைத் தரப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சபாநாயகருடனான சந்திப்பைத் தொடர்ந்து பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் கூடி அச்சந்திப்பின் விளைவுகள் குறித்து விவாதித்ததாக அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறினார்.

பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் 15வது பொதுத் தேர்தலுக்கு தயாராவது குறித்தும் தலைவர் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னர்.

அவசரகாலம் அமலில் இருக்கும் போது பிரதமர் வழங்கும் ஆலோசனையின் பேரில் பொருத்தமானது என மாமன்னர் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்ற தனது கருத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா  கடந்த மாதம் 24ஆம் தேதி அறிக்கை ஒன்றின் வாயிலாக  வெளியிட்டிருந்தார்.


Pengarang :