ECONOMYMEDIA STATEMENTSELANGOR

குழாய் பழுதுபார்ப்பு பணிகள் எதிர்பார்த்ததை விட விரைவில் பூத்தியாகும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மார்ச் 29- வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள குழாய்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட முன்கூட்டியே பூர்த்தியாகும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகத் தடையை ஏற்படுத்தக்கூடிய அந்த பழுதபார்ப்பு பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே பூர்த்தி செய்ய ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த பராமரிப்புப் பணிகளை விரைவுபடுத்த நாங்கள் முனைகிறோம். பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டால் விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். நீர் விநியோகமும் தாமதமின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

இது போன்ற விவகாரங்களில் நமக்கு முன் அனுபவம் உள்ளது. எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படாத பட்சத்தில் பணிகளை விரைவாக ஆரம்பித்து விரைவாக முடித்து விடலாம். நீர் விநியோகமும் விரைவாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்றார் அவர்.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நீர் விநியோகத் தடை தொடர்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது. பழுது காரணமாக நீண்ட நாட்களுக்கு நீர் விநியோகத் தடை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை பொது மக்கள் உணர வேண்டும் என்றார் அவர்.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் மார்ச் 30ஆம்  தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை கோம்பாக், கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம் உள்ளிட்ட 89 இடங்களில் 48 மணி முதல் 68 மணி நேரத்திற்கு நீர் விநியோகத் தடை ஏற்படும் என ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது.


Pengarang :