MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

முகேஷ் சபாபதி உள்பட இருவருக்கு யு.டி.எம். பல்கலைக்கழகத்தின் அரச கல்வி விருது

கோல நெருஸ், மார்ச் 28– மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில் இரு மாணவர்கள் உயரிய அரச கல்வி விருதைப் பெற்றுள்ளனர்.

கடல் உயிரியல் அறிவியல் துறையின் இளங்கலை பட்டதாரியான முகேஷ் சபாபதி (வயது 23) மற்றும் பயன்பாட்டு அறிவியல் (பல்லுயிர் பாதுகாப்பு நிர்வாகம்) துறையின் இளங்கலை பட்டதாரியான டியானா கமிலா நாடிம் (வயது 24) ஆகியோரே அவ்விரு மாணவர்களாவர்.

அனைத்துலக சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கவுள்ளதாக அவ்விரு மாணவர்களும் உறுதியளித்துள்ளனர்.

இந்த விருது கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முகேஷ், மூத்த மாணவர் என்ற முறையில் தனது அனுபவங்களை யு.டி.எம். பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களுடன பகிர்ந்துகொள்ளவிருப்பதாக கூறினார்.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் கடல் சார்ந்த விவகாரங்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து தாமும் பாடுபடப் போவதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் ஆதரவின்றி இந்த சாதனையை என்னால் புரிந்திருக்க முடியாது.  இங்கு பயன்ற போது யு.டி.எம். பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்து ஆறு தேசிய மற்றும் அனைத்துலக நிலையிலான மாநாடுகளில் பங்கு கொண்ட அனுபவம் எனக்கு உள்ளது என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற யு.டி.எம். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது அவர் இதனைத் தெரிவித்தார். முகேஷின் தந்தை எம்.சபாபதி மற்றும் தாயார் திருமதி எல்.நாகலட்சமியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனிடையே இந்த விருதைப் பெற்றது குறித்து கருத்துரைத்த டியானா கமிலா, தமது இந்த சாதனைக்கு சக மாணவர்களும் விரிவுரையாளர்களும் பெரிதும் துணை புரிந்ததாக கூறினார்.

தவிர, தாங்கள் ஈடுபட்டுள்ள துறையில் தீவிர ஈடுபாடும் அக்கறையும் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும் பட்சத்தில் அனைவராலும் வெற்றிக் கனியைப் பறிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

 

 


Pengarang :