PBTSELANGOR

சிலாங்கூரிலுள்ள 63 ஆலயங்களுக்கு வெ. 630,000 மானியம்- கணபதிராவ் வழங்கினார்

ஷா ஆலம், ஏப் 3- சிலாங்கூரிலுள்ள 63 ஆலயங்களுக்கு  6 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மானியத்தை  மாநில அரசு வழங்கியது. முஸ்லீம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கு இவ்வாண்டில் ஒதுக்கப்பட்ட மானியத்திலிருந்து இந்த நிதி வழங்கப்பட்டது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முதல் கட்டமாக இந்த 63 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு செயல் குழுவின் இணைத்தலைவர் வீ.கணபதிராவ் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆலயங்கள் சுற்றுவட்டார மக்களுக்கு சமூகப் பணிகளை ஆற்றுவதற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது என மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இந்த நிதியை விவேகமான முறையில் பயன்படுத்தும்படி ஆலய நிர்வாகத்தினரை கேட்டுக் கொண்ட அவர், கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக நலப்பணிகளை மேற்கொள்ள இந்த மானியம் துணை புரியும் எனத் தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.

மக்களின் நலனை புறக்கணித்து விட்டு ஆலய மேம்பாட்டுப் பணிகளில் மட்டும் ஆலய நிர்வாகத்தினர் குறியாக இருக்கக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற ஆயங்களுக்கு  மானியம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆலயங்களுக்கு மானியம் கோரி இவ்வாண்டில் சுமார் 800 மனுக்கள் வரை கிடைக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் எனினும், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை முறையாக பூர்த்தி செய்த முதல் 350 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த ஆலயங்களுக்கு வழங்குவதற்காக 20 லட்சம் வெள்ளி கொள்கை ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் 5,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரையிலும்  பிரத்தியேக காரணங்களுக்காக சில ஆலயங்களுக்கு 20,000 வெள்ளி வரையிலும் மானியம் வழங்கப்படும்.

எதிர்பார்த்த அளவுக்கு நம்மால் ஆலயங்களுக்கு பெரிய அளவில் நிதியுதவி வழங்க முடியாவிட்டாலும் முறையாக விண்ணப்பம் செய்யும் ஆலயங்களுக்கு முடிந்த அளவு உதவ முயல்கிறோம் என்றார் அவர்.


Pengarang :