SELANGOR

இணைய வசதி இல்லாதவர்களுக்கு உதவ பெரிய அளவில் தடுப்பூசி பதிவுத் திட்டம்

ஷா ஆலம், ஏப் 5– விவேக கைப்பேசி மற்றும் இணைய வசதி இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு இயக்கம் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

சிலாங்கூரிலுள்ள 37 விழுக்காட்டினர்  அத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிராததை கருத்தில் கொண்டு இமுனிசெல் தடுப்பூசி பதிவு இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், சிறப்பு முகப்பிடங்களில் சம்பந்தபட்டவர்களை வழக்கமான நடைமுறையைப் பயன்படுத்தி பதிவு செய்வதோடு அவர்களுக்கு இமுனிசெல் அட்டைகளை வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.

இந்த பதிவுத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் வட்டாரத் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற சேவை மையங்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் இமுனிசெல் தன்னார்வலர்கள் ஆகியோரும் உரிய பங்கினை ஆற்றுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் கோவிட்.19 தடுப்பூசித் திட்டத்திற்கு உதவும் வகையிலான இந்த இமுனிசெல் திட்டம் குறித்து கோவிட்-19 ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

மூத்த குடிமக்கள், பூர்வக்குடியினர், இணைய வசதி இல்லாத இடங்களில் வசிப்போரை கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பதிவு செய்வதை இலக்காக கொண்ட இந்த இமுனிசெல்  திட்டத்தை மந்திரி புசார் நேற்று பூச்சோங்கில் தொடக்கி வைத்தார்.


Pengarang :