ECONOMYPBTSELANGOR

உணவகங்களில் தூய்மையை சோதிக்க புதிய செயலி- ஷா ஆலம் மாநகர் மன்றம் அறிமுகம்

ஷா ஆலம், ஏப் 7– லைசென்ஸ் பெற்ற உணவகங்களின் தூய்மையை சுயமாக சோதித்துக் கொள்வதில் உதவக்கூடிய செயலியை ஷா ஆலம் மாநகர் மன்றம் அறிமுகப் படுத்தியுள்ளது.

உணவகங்கள் எப்போதும் சுத்தமானதாகவும் உணவுகள்  பாதுகாப்பானவையாகவும் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின்  வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

சம்பந்தப்பட்ட உணவகத்தின் தூய்மையை உறுதி செய்வதில் உணவக உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரின் பங்கேற்பும் இருப்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஐ-கிரேட் எனும் இத்திட்டத்தின் கீழ் உணவகத்தின் தூய்மை தொடர்பில் உணவக உரிமையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 30 பேரிடம் கருத்துகளைப் பெற்று அதன் தொடர்பான அறிக்கையை மாநகர் மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அவர் சொன்னார்.

தங்கள் உணவகத்தின் தூய்மை குறித்த நடப்பு நிலையை உரிமையாளர்கள் உடனுக்குடன் அறிந்து சுத்தத்தைப் பேணும் நடவடிக்கையை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இது வழி வகுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செயலியை மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் தொடக்கி வைத்தார்.

தொடர்ச்சியாக தூய்மையைப் பதிவு செய்யும் உணவகங்களை தனது அகப்பக்கம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மாநகர் மன்றம் பிரபலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செயலியை சுமார் 200 உணவகங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இந்த செயலியை பயன்படுத்த பல உணவக உரிமையாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.


Pengarang :