ECONOMYPBTSELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் 1,884 பேருக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 6– கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 1,884 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்குவதற்காக ஷா ஆலம் மாநகர் மன்றம் இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளது.

மாநகர் மன்றத்தின் இந்த பரிவுமிக்க உணவுக் கூடைத் திட்டத்திற்கு தேவையான நிதி பொதுமக்கள் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்கள் வாயிலாக திரட்டப்பட்ட நிதி, 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் நெகிழிப்பைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணம் ஆகியவற்றின் மூலம் திரட்டப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் உதவும் வகையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் 10,000 வெள்ளியை மானியமாக வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரம், சமூக நலன் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலையிலும்  யாரும் கைவிடப்படமாட்டார்கள் என்ற சுலோகத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து தரப்பினருக்கும் உதவும் நோக்கில் மாநகர் மன்றம் இத்திட்டத்தை அமல்படுத்துகிறது என்றார் அவர்.

இத்திட்டத்தை மேற்கொள்வதில் ஒத்துழைப்பை நல்குவதற்கு ஏதுவாக  மாநகர் மன்றம் 99 ஸ்பீட்மார்ட் பல்நோக்கு கடை நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :